Friday 21 October 2011

ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"


இன்று பெரும்பாலான மக்கள், மொழி சார்ந்த அடையாளத்தை, "இனம்" என்று புரிந்து கொள்கின்றனர். ஆனால், இலங்கைத் தீவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், மொழி அடையாளம் பிரதானமாக உணரப்படவில்லை. அதற்கு காரணம், காலனிய ஆட்சியாளர்களின் ஆங்கிலமே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. பாராளுமன்றம், அரச அலுவலகங்கள், நீதிமன்றங்கள், எங்கும் ஆங்கிலமே கோலோச்சியது. ஆரம்ப பாடசாலை முதல், பல்கலைக்கழகம் வரையில் ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. பருத்தித்துறை முதல் ஹம்பாந்தோட்ட வரையில் இது தான் நிலைமை. இலங்கையின் பெரும்பான்மை மக்கள் சிங்களம், அல்லது தமிழ் பேசினார்கள். ஆனால், சுதேசி மொழிகளுக்கு அரச அந்தஸ்து வழங்கப்படாமல், உழைக்கும் மக்களின் மொழியாக இழிவுபடுத்தப் பட்டது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றிய மேட்டுக்குடியினரும் அவ்வாறு தான் கருதி வந்தனர். இது போன்ற மேட்டுக்குடி மனப்பான்மையில் சிங்களவர், தமிழர் பேதம் இருக்கவில்லை.

இலங்கை இடதுசாரிகளால், நாடு தழுவிய பாட்டாளி மக்களின் எழுச்சியை உருவாக்க முதலாவது தடையாக இருந்தது, மொழி தான். இங்கிலாந்தில் கல்வி கற்ற, இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கூட, உழைக்கும் மக்களுக்கு புரியாத ஆங்கிலத்திலேயே அரசியல் பேசினார்கள். பழமைவாதத்தில் ஊறிய உள்நாட்டு மக்கள், மார்க்சியத்தை மேலைத்தேய இறக்குமதியாக பார்த்தார்கள். இதனால், சிங்கள பேரினவாதத் தலைவர்கள், இலகுவாக இடதுசாரிகளைத் தாக்க முடிந்தது. "இடதுசாரிகள் நாஸ்திகர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால், கோயில்களை, விகாரைகளை இடித்து தள்ளி விடுவார்கள்." இவ்வாறான பிரச்சாரம் மத நம்பிக்கை கொண்ட மக்களை வெகுவாக பாதித்தது. ஆனால், இடதுசாரிகளை தாக்கிய சிங்களத் தலைவர்கள் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்தனர். "கடவுள் நம்பிக்கையற்ற இடதுசாரிகளை" கண்டு பயந்த பெரும்பான்மை மக்கள், சிங்கள இனவாதம் பேசிய உதிரி அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்தார்கள். 1947 பொதுத் தேர்தலில், சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் பலர், சிங்கள-பௌத்த இனவாதிகள். அவர்களின் நோக்கம்: "சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்குவது. பௌத்த மதத்தின் கடந்த கால மேன்மையை மீட்டெடுப்பது." சுருக்கமாக, சிங்கள-பௌத்த தேசியவாத கருத்தியல் மூலம், சாமானியர்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார்கள். கிட்டத்தட்ட இதே போன்ற அரசியல், தமிழ் பேசும் வடபகுதியில் நடந்து கொண்டிருந்தது. "ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு?" என்பன போன்ற கோஷங்கள், சிங்கள இனவாதிகளை நகல் எடுத்தது போன்று அமைந்திருந்தன.

தேசத்தில், "சிங்களத்தை, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமா?" என்ற விவாதம் கூட ஆங்கில மொழியில் தான் நடந்து கொண்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆங்கிலத்தில் தமது உரையை நிகழ்த்த வேண்டியிருந்தது. விவாதங்களை மொழிபெயர்க்கும் வசதி இல்லை என்ற குறைபாடு காரணமாக கூறப்பட்டது. பாராளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகள் என்ன பேசுகிறார்கள் என்பது, சாமானிய மக்களுக்கு புரியவில்லை. இனவாத அரசியல்வாதிகள், மக்களுக்கு கொழும்பு அரசியலை திரித்துக் கூறிக் கொண்டிருந்தனர். இதனால், ஆங்கிலம் தெரியாத பாமர மக்கள் மத்தியில், இனவாதக் கருத்துக்கள், சாதாரண அரசியல் கருத்துகளைப் போன்று பதிந்து விட்டன. இலங்கைப் பாராளுமன்றம் மட்டும், காலனியவாதிகளின் எச்சமாக விளங்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னரும், பல அரச அலுவலகங்களில் பிரிட்டிஷ் கொடி பறந்து கொண்டிருந்தது. சாமானிய மக்களைப் பொறுத்த வரையில், சுதந்திரத்தால் ஏற்பட்ட மாற்றம் எதையும் கண்கூடாக காணவிலை. இலங்கை இன்னமும் பிரிட்டிஷ்காரர்கள் ஆள்கின்றார்களா, என்ற ஐயம் உண்டாகும் வகையில், எதுவும் மாறாமல் அப்படியே இருந்தன. ஆளும் வர்க்கத்தினர், கறுப்பு - ஆங்கிலேயர்கள் போன்று நடந்து கொண்டனர். பௌத்த-இந்து பண்பாட்டுக்கு மாறாக, மது பான விருந்துகளும், குதிரைப் பந்தயங்களும், அரசியல் தலைவர்களின் விருப்பமான பொழுதுபோக்குகளாக இருந்தன.

இனம் என்ற சொல்லாடலின் போதாமைகள் :

இலங்கையின் அரசியல் யாப்பு தயாரித்த, டொனமூர் குழுவும், சோல்பரி குழுவும், "இனம்" என்பதை, மொழி அடிப்படையில் வரையறுக்கவில்லை. இந்திய மரபுவழி சார்ந்த சொல்லான "ஜாதி", இனம் என்று மொழிபெயர்க்கப் பட்டது. குறிப்பாக, பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில், ஜாதி என்றொரு பிரிவு உண்டு. இந்தியாவில், அந்த இடத்தில் சாதிப் பெயரை எழுதுவார்கள். ஆனால், இலங்கை நிர்வாகத்தில், சாதிக்கு பதிலாக, "சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர், பறங்கியர், ஐரோப்பியர்...." இவ்வாறான பெயர்களை குறித்துக் கொள்வார்கள். இலங்கையர் சமூகத்தை மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ளடக்கும் செயல்முறை, டொனமூர் யாப்பு காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அந்தப் பிரிவுகளின் அடிப்படையில் தான் அமைத்திருந்தனர். அன்று ஆங்கிலேயர்கள், இலங்கை மக்களை எவ்வாறு பிரித்து வைத்தார்களோ, இன்றைக்கும் அதே பிரிவினை தொடர்வதைப் பார்க்கலாம். இன்று முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் தம்மை தனியான தேசிய இனமாக கருதிக் கொள்கிறார்கள் என்றால், அதற்கான எண்ணக்கரு ஆங்கிலேயர் காலத்திலேயே விதைக்கப் பட்டு விட்டது.

இந்திய வம்சாவழித் தமிழருக்கும், இலங்கைத் தமிழருக்கும் இடையில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருக்கவில்லை. இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவப் படுத்திய யாழ் - வேளாள மையவாதிகள், மலையகத் தமிழர்களை தீண்டத்தகாத சாதியினராக கருதி ஒதுக்கினார்கள். தமிழர்களுக்கு மத்தியில் நிலவிய சாதிப் பிரிவினையை, சிங்களப் பேரினவாதம் தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. இலங்கையின் மொத்த சனத்தொகையில், இன்றுள்ள மலையகத் தமிழரின் விகிதாசாரத்தை விட, அன்றிருந்த விகிதாசாரம் அதிகமாக இருந்தது. இந்திய தோட்டத் தொழிலாளரை நாடற்றவராக்கிய, பிரஜாவுரிமை சட்டம் காரணமாக, மலையகத் தமிழரின் எண்ணிக்கை அரைவாசியாக குறைந்தது. பிரஜாவுரிமை இழந்த தமிழர்களை, இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டனர். இலங்கையில் தமிழரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற தூர நோக்கோடு செயல்பட்டது. வரப்போகும் ஆபத்தை உணர முடியாதவாறு, இலங்கைத் தமிழ்த் தலைவர்களின் கண்களை சாதி வெறி மறைத்தது. ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தேசியத் தலைவர்கள், இந்திய வம்சாவழித் தமிழரின் பிரஜாவுரிமை பறித்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சிக்கு துணை போன சாதி அபிமானிகள், எதிர்காலத்தில் ஈழத்தமிழர் மீதான இனவெறி அடக்குமுறைக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தனர்.

1943 ம் ஆண்டு, வட இலங்கையில், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களின் அமைப்பொன்று உருவாகி இருந்தது. "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" என்ற அமைப்பானது, தாழ்த்தப்பட்ட தமிழர்களை தனி இனமாக அங்கீகரிக்குமாறு கோரி வந்தது. அரசியல் யாப்பு எழுதுவதற்கு முன்னர், சோல்பரி குழுவினர் இலங்கை முழுவதும் சுற்றுப் பயணம் சென்றனர். சிறுபான்மைத் தமிழர் மகாசபை பிரதிநிதிகள், சோல்பரி குழுவினரை யாழ்ப்பாணத்தில் தலித் மக்களின் நிலைமையை பார்வையிட வருமாறு அழைத்தனர். உயர்சாதி வெறியர்களின் எதிர்ப்பை மீறி, தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையை நேரில் கூட்டிச் சென்று காட்டினார்கள். இருப்பினும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் யாப்பில் எழுதப் படுவதை, கொழும்பு ஆளும்வர்க்கத்தில் செல்வாக்கு மிக்க, ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தடுக்க முடிந்தது. பொன்னம்பலம் போன்ற சாதிமான்கள் பிரேரித்த, பழமைவாத தேசவழமை சட்டம் சோல்பரி யாப்புக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.கடந்த அறுபதாண்டுகளாக, மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் கூட தேச வழமை சட்டத்தில் கை வைக்கவில்லை. இன்றைய தலைமுறைக்கு, "தாலிபான் சட்டம்" என்றால் இலகுவில் புரியக் கூடிய தேச வழமை சட்டம், உயர்சாதி நிலவுடமையாளர்களை பாதுகாக்கின்றது. பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது. இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே இந்த விசேட சட்டம் உள்ளது குறிப்பிடத் தக்கது.

ஆங்கிலேயரின் இறுதிக் காலத்தில், தெற்கில் பௌத்த மத மறுமலர்ச்சியும், வடக்கில் சைவ மத மறுமலர்ச்சியும் தோன்றியது. பௌத்த மத மறுமலர்ச்சிக்கு, ஒல்கொட் போன்ற ஆங்கிலேயர்களின் பங்களிப்பும் இருந்துள்ளது. பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சத்தை, சிங்களத்தில் மொழிபெயர்த்தது மட்டுமல்ல, பண்டைய சரித்திரத்தில் "சிங்களவர்-தமிழர் பிரச்சினையை" இடைச்செருகல் செய்தனர். சிங்கள-பௌத்த கருத்தியலை உருவாக்கிய அநகாரிக தர்மபால, பிற்காலத்தில் சிங்கள மகாசபை போன்ற அரசியல் கட்சிகளுக்கு குருவாக திகழ்ந்தார். அதே போல, சைவத்தையும், தமிழையும் வளர்த்த ஆறுமுக நாவலர், தமிழ் பழமைவாதிகளின் குருவானார். தெற்கில் "பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி" சிங்கள இனவாதத்தின் அத்திவாரமாக விளங்கியது. அதனைப் பின்பற்றி, வடக்கில் "சைவத்-தமிழ் மறுமலர்ச்சி" தமிழ் இனவாதத்திற்கு அடிக்கல் நாட்டியது.

பௌத்த மதம், சிங்களவர்களை நிறுவனமயப் படுத்த சிறந்ததாக விளங்கியது. இந்து மதம், (அல்லது சைவ மதம்) இன்று வரை சாதியமைப்பை நிராகரித்த மதமல்ல. அதற்கு மாறாக, பிராமணீயத்தை எதிர்த்து உருவான பௌத்த மதம், மேலெழுந்தவாரியாக சாதி அமைப்புக்கு எதிரானது. இருப்பினும், சிங்கள- பௌத்த மடாலயங்கள், சாதிவாரியாக பிரிந்துள்ளன. இந்த வேறுபாடு வெளித்தெரியா வண்ணம், பௌத்த மதம், சாதி கடந்து மக்களை ஒன்றிணைத்தது. இதே நேரம், வடக்கில் தமிழர்கள், தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சி தோன்றும் வரையில் காத்திருக்க நேர்ந்தது. ஐம்பதுகளில், பண்டாரநாயக்கவின் சிங்களம் மட்டும் சட்டத்தின் எதிர்வினையாக, தமிழ்த் தேசியக் கருத்தியல் வலுப்பெற்றது. அது வரையில், தமிழர்கள் தம்மை தனியான இனமாக அடையாள படுத்துவதை விட, குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவராக அடையாள படுத்திக் கொள்ளவே விரும்பினார்கள். தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியும், தமிழகத்து திராவிட அரசியலை முன் மாதிரியாகக் கொண்டு தான் உருவாக்கப் பட்டது. தமிழீழ ஆயுதக் குழுக்கள் தோன்றும் வரையில், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் உரைகள் ஈழத் தமிழ் மக்களை கவர்ந்திழுத்தன.

இஸ்லாமிய மதராசாக்களில், அரபி மொழியும், திருக் குர் ஆனும், கற்பிக்கப் படுவதைப் போன்று, பௌத்த சங்கங்கள் நடத்திய கிராமிய பாடசாலைகளில், சிங்களமும், பௌத்த மதக் கல்வியும், போதிக்கப் பட்டன. ஆங்கிலேய அரசு, கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பாடசாலைகளில், முழுக்க முழுக்க ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. சுதேசி மொழிகளான சிங்களமும், தமிழும் புறக்கணிக்கப் பட்டன. சில பணக்கார பௌத்த சங்கங்கள், ஆனந்தா கல்லூரி போன்ற தனியார் பாடசாலைகளை உருவாக்கின. இதே போன்ற தோற்றப்பாட்டை, தமிழர் பகுதிகளிலும் காண முடியும். குறிப்பாக, யாழ். இந்துக்கல்லூரி, "சைவத்தையும், தமிழையும்" வளர்ப்பதற்காக கட்டப்பட்டது. உயர்சாதி வேளாளர்களின் அமைப்பு அந்த பள்ளிக்கூடத்தை நிர்வகித்ததால், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்களை அனுமதிக்கவில்லை. பிற்காலத்தில், பாடசாலைகள் எல்லாம் அரசுடமையாக்கப் பட்டன. அதற்குப் பிறகு தான், இந்துக் கல்லூரியில் அனைத்து சாதிகளை சேர்ந்த மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். இன்றைக்கும் கூட, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி சிங்கள தேசியத்தின் கோட்டையாக விளங்குவது போல, யாழ் இந்துக் கல்லூரி தமிழ் தேசியத்தின் கோட்டையாக உள்ளது.

பௌத்த சங்கங்கள் நடத்திய, கிராமியப் பாடசாலைகளில் சிங்களம் கற்பித்த ஆசிரியர்கள், காலனிய அடிவருடிகளின் ஆட்சி மாற வேண்டும் என விரும்பினார்கள். இவர்களோடு, ஆயுர்வேத மருத்துவர்களும் சிங்கள தேசியவாத கருத்தியலோடு உடன்பட்டார்கள். உண்மையில், சிங்கள பேரினவாதத்தின் எழுச்சியை, மகாவம்ச பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக காட்டுவது மோசடியாகும். சிங்கள பேரினவாதிகள் நிறுவத் துடிக்கும் தவறான கருத்தை, தமிழ் தேசியவாதிகளும் பரப்பி வருவது விசனத்திற்குரியது. ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களை, சிங்கள ஆசிரியர்களும், ஆங்கில மருத்துவர்களை, ஆயுர்வேத மருத்துவர்களும் போட்டியாக கருதியமை, ஒரு பொருளாதாரப் பிரச்சனை. காலனிய ஆட்சியின் பலனாக உள்நாட்டு உற்பத்திகள் நலிவடைந்தன. சிங்கள மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்த ஆசிரியர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் போன்ற பிரிவினர், தமது வர்க்க நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வாக சோஷலிசப் பொருளாதாரத்தை முன் மொழிந்த மார்க்சியர்களை யாருக்கும் பிடிக்கவில்லை. "கடவுள் மறுப்பாளர்கள்" என்று பௌத்த பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். "போல்ஷெவிக் படுகொலையாளர்கள்" என்று ஆங்கிலேயர்கள் வெறுத்தார்கள். அத்தகைய பின்னணியில், பண்டாரநாயக்க போன்றோர் நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பண்டாரநாயக்கவுக்கு பதிலாக, இலங்கை கம்யூனிசக் கட்சி ஆட்சி அமைத்திருந்தால், பிரிட்டன் இலங்கை மீது போர்ப்பிரகடனம் செய்திருக்கும். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மலேசியாவில் ஏற்பட்ட இரத்தக்களரி இலங்கையில் ஏற்பட்டிருக்கும். பிரிட்டனைப் பொறுத்த வரையில், சிங்களவர்களும் தமிழர்களும் இன்னும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தாலும் பரவாயில்லை. ஆனால், அடுத்த நூறாண்டுகளுக்காவது மார்க்சியவாதிகள் அதிகாரத்திற்கு வர விடக்கூடாது. இன்றைக்கும், ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள், சிங்கள பேரினவாதிகள், தமிழ் தேசியவாதிகள், "கம்யூனிச எதிர்ப்பாளர்கள்" என்ற பதாகையின் கீழ் ஒன்றிணைவதைக் காணலாம்.

"சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"

இலங்கையின் வரலாற்றில் 1956 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால், இன்று விஸ்வரூபமாக விரிந்து இலட்சக்கணக்கான மக்களின் சாவுக்கும் காரணமான இனப்பிரச்சினையின் தோற்றுவாயும் அது தான். 1956 வரையில், சாதி, வர்க்க பிரிவினையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. 1956 க்குப் பின்னர், தேசியவாதம் என்ற கருத்தியல் அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. தேசியவாதிகள் கற்பித்த இனம் என்ற அடிப்படையில் இருந்தே சமூக நோக்கு விரிந்தது. சிங்களவர்கள், தமிழர்கள், ஆகிய இரண்டு மொழி பேசும் சமூகங்களிலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன.

சிங்களவர்கள் மத்தியில் அந்த சாதனையை நிகழ்த்தியவர், பண்டாரநாயக்க. அதே போன்று, தமிழர்களையும் தேசியவாதிகளாக மாற்றிய பெருமை செல்வநாயகத்தை சாரும். இரண்டு தலைவர்களுக்கும் இடையில் ஒற்றுமைகளும் இருந்தன. இருவரும் சமுதாயத்தில் உயர்சாதியாக கருதப்படும், "கொவிகம-வெள்ளாள" சாதியில் பிறந்தவர்கள். அதிலும், பிரித்தானியா சென்று கல்வி கற்கும் அளவு வசதி படைத்த மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள். (கொழும்பு மேட்டுக்குடி பிள்ளைகள் மட்டுமே படிக்கும், சென் தோமஸ் கல்லூரியில் ஒரே காலத்தில் கல்வி கற்றுள்ளனர்.) சிறுபான்மை கிறிஸ்தவமதத்தில் பிறந்த போதிலும், பெரும்பான்மை மதத்தவரின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு அரசியல் நடத்தியவர்கள். அனைத்து சாதிகளையும் தேசியம் என்ற குடையின் கீழ் ஒன்று படுத்தியமை, இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது.

1948 ம் ஆண்டில் இருந்து நிகரற்ற ஆளும் கட்சியாக இருந்த, ஐக்கிய தேசியக் கட்சி 1956 தேர்தலில் தோல்வியுற்றது. சிங்களப் பகுதிகளில் பண்டாரநாயக்கவின் கட்சி வெற்றி பெற்றது. சில வருடங்களுக்கு முன்னர் தான், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைத்திருந்தார். தமிழ் பிரதேசமான, வட-கிழக்கு மாகாணங்களில் செல்வநாயகத்தின் கட்சி பல இடங்களைக் கைப்பற்றியது. செல்வநாயகமும், சில வருடங்களுக்கு முன்னர் தான், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தமிழரசுக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஸ்தாபித்தார். சுதந்திரக் கட்சி, இலங்கையை பௌத்த-சிங்களவர்களுக்கான தாயகமாக்க வேண்டுமென்ற கொள்கையை பரப்புரை செய்தது. தமிழரசுக் கட்சி, இந்து-கிறிஸ்தவ தமிழருக்கான தாயகக் கோட்பாட்டை பரப்பியது. இதற்காக மட்டும் தான் மக்கள் இவ்விரு கட்சிகளுக்கு வாக்களித்தார்கள் என்றே புரிந்து கொள்ளப் படுகின்றது. சிங்கள தேசியவாதம், தமிழ் தேசியவாதம் இரண்டுமே, நாங்கள் அவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இது சமூக-பொருளாதார பின்னணியை ஆராயாத, வெறும் அரசியல் சார்ந்த விளக்கம் மட்டுமே.

1956 க்கு முன்னர், இலங்கையில் சாதி அரசியல் கோலோச்சியது. தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் பகிரங்கமாக சாதி அபிமானம் காட்டினார்கள். "ஆதிக்க சாதி மக்களுக்காக, ஆதிக்க சாதி வேட்பாளர்களால் நடத்தப் படுவதே", இலங்கை அரசியலாக இருந்தது. சிங்களவர்களைப் பொறுத்த வரையில் "கொவிகம", தமிழருக்கு "வெள்ளாளர்கள்". பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட சாதியினர் எப்போதும் புறக்கணிக்கப் பட்டே வந்துள்ளனர். தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்கள், கொவிகம-வெள்ளாள சாதியினர் என்பது எழுதப்படாத விதியாகவிருந்தது. தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் வேட்பாளர்கள், உள்ளூர் நிலவுடைமையாளர் வீட்டில் தான் தங்குவார். அதே சாதியை சேர்ந்த நிலப்பிரபுவும், தன்னிடம் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டுமென உத்தரவிடுவார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இரண்டையும் சேர்ந்த வேட்பாளர்கள் இவ்வாறு தான் தேர்தலில் நின்று ஜெயித்தார்கள். காலப்போக்கில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு காரணமாக, நிலவுடமையாளர்களின் பிடி தளர்ந்தது. அதற்கு முக்கிய காரணம், கம்யூனிசத்தை வளர விடாமல் தடுப்பதற்காக, இலங்கை அரசு நடைமுறைப் படுத்திய சமூக நல திட்டங்கள். முரண்நகையாக, ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்த திட்டங்கள், அந்தக் கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தது.

ஆங்கிலேயரின் காலனிய ஆட்சியில், ஐரோப்பியரும், படித்த மேட்டுக்குடியினரும் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர், அனைத்துப் பிரஜைகளுக்கும் வாக்குரிமை வழங்கப் பட்டது. அரச பாடசாலைகளில் இலவசக்கல்வி, அரச மருத்துவமனைகளில் இலவச மருத்துவம், என்பன சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கிடைத்தன. உண்மையில், மார்க்சியக் கட்சிகளின் நீண்ட காலக் கோரிக்கைகள் இவை. சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்க மக்களிடம், இந்தக் கோரிக்கைகள் இலகுவில் எடுபடும். கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, அரசே முன் நின்று அந்த திட்டங்களை நிறைவேற்றியது. நிச்சயமாக, மக்கள் அதற்குப் பிறகு கம்யூனிசத்தை மறந்து விட்டார்கள். ஆனால், சமூக நலத் திட்டங்களின் விளைவாக அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது. கல்வி இலவசமாயினும்,ஆங்கில வழிக் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் தடையாகவிருந்தது. எழுதப், படிக்கத் தெரிந்த ஒடுக்கப் பட்ட சாதியினர், அரசியல் முடிவுகளில் தமது பங்களிப்பு எதுவுமில்லை என்பதை அறிந்து கொண்டனர்.

அரசின் பாரபட்சமான கல்விக் கொள்கையால், ஆசிரியர்களும் பெருமளவு பாதிக்கப் பட்டனர். ஆங்கிலத்தில் கற்பித்த ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப் பட்டது. அதே நேரத்தில், சிங்களம் அல்லது தமிழில் கற்பித்த ஆசிரியர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைத்தது. மருத்துவத் துறையிலும், ஆங்கிலேயர் அறிமுகப் படுத்திய கல்வி கற்ற வைத்தியர்களுக்கே மதிப்பு அதிகம். அவர்களின் சான்றிதல்களை மட்டுமே அரசு அங்கீகரித்தது. உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் வேலையின்றி தவித்தார்கள். அப்படியே வேலை கிடைத்தாலும், ஆங்கிலம் தெரிந்த வைத்தியரை விட குறைவாகவே சம்பாதிக்க முடியும். சுருக்கமாக, ஆங்கில மருத்துவம் பயின்றவர்கள், சமூகத்தில் மேன் நிலையில் இருந்தனர். தாய்மொழியில் சுதேசி மருத்துவம் பயின்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாகவிருந்தது. வட மாகாணத்திற்கான ஆயுர்வேதக் கல்லூரி, கைதடி என்ற ஊரில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற விடயம், இன்றைக்கும் பல தமிழருக்கு தெரியாது. அந்தளவுக்கு, சுதேசி மருத்துவர்கள், அரசினால் மட்டுமல்ல, சமூகத்தினாலும் புறக்கணிக்கப் படுகின்றனர். மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் எல்லாம், சிங்களவர், தமிழர், இரண்டு சமூகங்களுக்கும் பொதுவானவை தான்.

சமூக விஞ்ஞானத்தில் குட்டி-பூர்ஷுவா என்று அழைக்கப்படும் கீழ் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி, 1956 தேர்தல் முடிவை தீர்மானித்தது. பூர்ஷுவா அல்லது மேல் மத்தியதர வர்க்கத்தினருக்கு கிடைத்து வந்த, வசதி வாய்ப்புகள் கைவரப் பெறாதவர்கள். ஆங்கில அறிவு குறைவாக இருந்த படியால், பதவிகளை கை நழுவ விட்டவர்கள். அவர்களிடம் இருந்த ஒரேயொரு துருப்புச் சீட்டு, அரசியல் அதிகாரம். தமக்கு பரிச்சயமான சிங்களம், அல்லது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்த கட்சிகளின் பின்னால் அணி திரண்டார்கள். பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சிக்கு, (தேர்தல் காலத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டது) ஓட்டுப் போட்டு வெல்ல வைத்த சிங்கள நடுத்தர வர்க்கத்தினருக்கு, இது ஒரு வர்க்கப் பிரச்சினை என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆங்கில மொழி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம், சிங்களவர், தமிழர் இருவருக்கும் பொதுவானது. இந்த புரிந்துணர்வு பல சிங்களவர்களிடம் இருந்துள்ளது. ஆயினும், அரசியல் தலைவர்களின் சந்தர்ப்பவாத இனவாதத்தை அற்ப விஷயமாக கருதி புறக்கணித்தார்கள். இது சிங்களவர்களுக்கு மட்டும் பொதுவான குறைபாடு அல்ல. தமிழர்களும் நீதியான கோரிக்கைகளுக்கு பின்னாலான, தலைமைகளின் இனவாதக் கருத்துகளை பெரிது படுத்துவதில்லை.

சுதந்திரம் கிடைத்து ஐந்து ஆண்டுகளாகியும், வங்கிகள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்களில் எல்லாம் அனைத்துப் பதிவுகளும் ஆங்கில மொழியில் இடம்பெற்றன. அரச அலுவலகத்திற்கு செல்லும் மக்கள், அதிகாரிகளுடன் ஆங்கில மொழியில் தொடர்பு கொள்ள வேண்டிய நிலைமை நீடித்தது, காலனிய மொழிக்கு பதிலாக, சிங்களத்தையும், தமிழையும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் திட்டம் ஏற்கனவே அரசிடம் இருந்துள்ளது. அதற்கென ஒரு ஆணைக்குழு, 1952 தொடக்கம் இயங்கி வந்தது. ஆனால், அரசினால் மிகக் குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்ட ஆணைக்குழு, சில மொழிபெயர்ப்பு வேலைகளைத் தவிர, உருப்படியாக எதையும் செய்யவில்லை. சிங்கள மக்கள் மத்தியில், மொழி உரிமைக்காக போராடியவர்கள் இரண்டு வகைப் பட்டவர்கள். ஒரு பிரிவினர், சிங்களத்தோடு தமிழையும் உத்தியோகபூர்வ மொழியாக்க விரும்பினார்கள். இன்னொரு பிரிவினர் மிகவும் தீவிரமாக செயற்பட்டனர். அவர்கள், சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டுமென விரும்பியதுடன், தமிழர்களை சந்தேகக்கண் கொண்டு நோக்கினார்கள். இரண்டாவது பிரிவினரின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டு மொழிகளினதும் உரிமைகளுக்காக பேசிய சிங்களவர்களும், வாய்மூடி மௌனிகளானார்கள்.

பெரும்பாலும், சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சமூகப்பிரிவுகள் யாவும், ஏதோ ஒரு வகையில் தமிழர்களுடன் புரிந்துணர்வைக் கொண்டிருந்தன. எந்த வகையிலும், தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடியாத ஒரு சமூகப் பிரிவினர், பௌத்த மத பிக்குகள் மட்டுமே! மதவெறி கண்ணை மறைத்தது!! பௌத்த மதம் சங்க அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த சங்கங்கள், வெறுமனே மதத்தை மட்டும் போதிக்காமல், அரசியல் அபிலாஷைகளுடனும் இயங்கிக் கொண்டிருந்தன. இன்றைக்கும், குறிப்பிட்ட சில பௌத்த சங்கங்கள் இனவாதம் பேசும் அதே தருணத்தில், வேறு சில இன நல்லுறவை விரும்புகின்றன. ஆரம்பத்தில், சிங்களத்துடன், தமிழுக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்து கொடுக்க விரும்பிய பண்டாரநாயக்க, புத்த பிக்குகளின் வற்புறுத்தலால் சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்கினார். இதற்கு எதிர்வினையாக செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக, "பண்டா-செல்வா ஒப்பந்தம்" ஏற்பட்டு, தமிழுக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது. ஆயினும், புத்த பிக்குகள் போர்க்கொடி தூக்கியதால், பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. வெறுத்துப் போன செல்வநாயகம்,"சிங்களவர்கள் எதுவும் தர மாட்டார்கள்." என்ற விரக்தியில், "தனித் தமிழீழம்" என்ற புதிய பாதையை தேர்ந்தெடுத்தார்.


"ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!


[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்] 
1958 ம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரம் பற்றிய பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. சிங்கள பேரினவாதிகளும், தமிழ் குறுந் தேசியவாதிகளும் தமது நலன்களை பாதுகாக்கும் பொழிப்புரை வழங்குகின்றனர். தமிழ் தேசிய பார்வையில்: "இந்தக் கலவரமானது, தமிழர்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்குடன், சிங்களவர்கள் நடத்திய இனப் படுகொலையின் ஆரம்பம்." சிங்கள தேசிய பார்வையில்: "வட-கிழக்கில் வாழும் சிங்கள சகோதரர்கள் தாக்கப் பட்டதற்கு பதிலடி".

Tarzie Vittachi எழுதிய “Emergency ’58" நூல், அன்று நடந்த கலவரம் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பாக கருதப் படுகின்றது. கலவரத்தின் போது நடந்த அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்துள்ள அந்த நூலில், தமிழர்களே அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாண எல்லையோராமாக உள்ள, பொலநறுவை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் அடித்து விரட்டப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில், சிங்களக் குடியேற்றக் கிராமங்களும் தமிழர் விரோத வன்முறைக்கு களமாக விளங்கியுள்ளன. மலையகத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். கொழும்பில் நடுத்தர வர்க்க தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டுள்ளன. சில இடங்களில், தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், யாழ் மாவட்டத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் வித்தியாசமானவை. இவை குறித்து விபரமாக பார்ப்பதற்கு முன்னர், அன்றைய சமூக-அரசியல் பின்னணியை ஆராய வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொல்வதற்கு ஏதுவான முரண்பாடுகள், ஏற்கனவே அங்கு இருந்திருக்க வேண்டும்.

1956 வரையிலான இலங்கையர் சமுதாயம் பின்வரும் குணாம்சங்களை கொண்டிருந்தன. அவை, சிங்களவர், தமிழர், இரண்டு இனங்களுக்கும் பொதுவானவை. ஆங்கிலேய காலனிய கால நிர்வாகம், சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியானது, பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமான சேவகனாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியானது, வேறு மாற்று இல்லாத, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. தமிழ்க் காங்கிரஸ், தமிழர்கள் நலன் குறித்து பேசினாலும், மறைமுகமாக ஆளும் கட்சியுடன் ஒத்துழைத்தது. இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்டவர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டன. ஆங்கில வழிக் கல்வி கற்ற மேட்டுக்குடியினர், கொவிகம-வெள்ளாள சாதியினரின் ஆதிக்கம் அவ்விரண்டு கட்சிகளிலும் அதிகமாக காணப்பட்டது. இன அடையாளத்தை விட, சாதிய அடையாளமே முக்கியமாக கருதப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டு வந்தன.

"சந்தையில் உள்ள ஓட்டை" என்று வணிகத்தில் கூறுவது போல, "பாராளுமன்ற ஜனநாயக முறையில், இனம் சார்ந்த அரசியல் சித்தாந்தம் அதிக நன்மை பயக்கும்", என்று சில அறிவுஜீவிகள் உணர்ந்து கொண்டனர். சிங்கள இனத்தின் பழம்பெருமை பேசும் சிங்கள தேசியவாதம், அனைத்து சிங்களவர்களையும் சாதிய வேற்றுமை கடந்து ஒன்றிணைத்தது. அதே போன்று, தமிழின பழம் பெருமை பேசும் தமிழ் தேசியம், சாதியால் பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்த்தது. பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியும், செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், ஒரே வேலையை இரண்டு தளங்களில் செய்து கொண்டிருந்தன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி பேரினவாதமாக பரிணமித்தது. தனது இனத்தின் மேலாண்மையை மட்டும் சிந்திப்பவர்களுக்கு, பிற இனங்களை ஒடுக்குவது தவறாகத் தெரிவதில்லை. 1956 தேர்தலில், சுதந்திரக் கட்சியின் வெற்றியை, சிங்களத் தேசியவாதத்தின் வெற்றியாக கருதினார்கள். சிங்களவர் கையில் அதிகாரம் வந்து விட்டால், இலங்கை பௌத்த-சிங்கள நாடாக்கலாம் என கடும்போக்காளர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அமைச்சரவையில் இடதுசாரிகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்க அரசு, அவர்களை ஏமாற்றமடைய வைத்தது.

மறு பக்கத்தில், சிங்கள தேசியத்திற்கு போட்டியாக தோன்றிய தமிழ் தேசியவாதம், தமிழ்ப் பிரதேசங்களுக்கு உரிமை கோரியது. "ஆண்ட பரம்பரையான தமிழினம் மீண்டும் ஆள்வதற்கு தனியரசு வேண்டும்" என்ற கோரிக்கையில் உருவானது தான் தமிழரசுக் கட்சி. பிரிட்டிஷாரும், சிங்களவர்களும் தம்மை பிரிவினைவாதக் கட்சியாக கருதி விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலத்தில் "சமஷ்டிக் கட்சி" என்று பெயரிட்டுக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தமது கொள்கைகள் குறித்து தெளிவாக வரையறை செய்யா விட்டாலும், தமிழர்கள் சார்பில் அரசுடன் பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண சமூகத்தில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த நடுத்தர வர்க்க பிரதிநிதிகளை கொண்டிருந்ததால், அவர்களால் ஒன்று பட்ட தமிழ் இன/மொழி உணர்வை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக "சிங்களம் மட்டும்" சட்டமானது, சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெறாத, ஆங்கிலத்தில் மட்டுமே பணியாற்றத் தெரிந்த, தமிழ் நடுத்தர வர்க்கத்தை கடுமையாக பாதித்தது. அவர்களில் பலர் வேலை இழந்தனர். தமிழரசுக் கட்சியானது, எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட தமிழ் நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை பயன்படுத்திக் கொண்டது. "தமிழ் மட்டும்" ஆட்சி மொழியான தனியரசில் அவர்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தது.

தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கைக்கு பண்டாரநாயக்க அரசு இணங்கியிருக்கப் போவதில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை பிராந்திய மொழியாக்குவதில் பண்டாரநாயக்கவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதேச சபைகள் அமைப்பதற்கும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு, "சிங்களவர்கள் அனைவரும் எதிப்புத் தெரிவித்தாக" கூறுவது தவறு. பண்டாரநாயக்கவே சிங்களப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, ஒப்பந்தத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டினார். பண்டாரநாயக்க என்ற ஆளுமை பொருந்திய நபருக்காக என்றாலும், சாதாரண சிங்கள மக்கள் ஒப்பந்தத்தை வரவேற்றனர். நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென நினைப்பதே பாமர மக்களின் மனோபாவமாகும். நிச்சயமாக, அரசாங்கத்தில் இருந்த கடும்போக்காளர்களும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பௌத்த பிக்குகளும் ஒப்பந்தத்தை எதிர்க்கவே செய்தனர். மொத்த சிங்கள மக்கட்தொகையில், அத்தகைய பிரிவினர் சிறுபான்மையினர் தான். இருப்பினும், உணர்ச்சிகரமான பேச்சுகளால் மக்களை உசுப்பி விடும் வல்லமை பெற்றிருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில், தமிழ்க் காங்கிரஸ் "ஒப்பந்த எதிர்ப்பு அரசியலில்" இறங்கியது. "செல்வநாயகம் சிங்களவன் காலில் விழுந்து சரணடைந்து விட்டார்," என்று பிரச்சாரம் செய்தது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வருமாறு. பிராந்திய சபைகள் கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் அதிகாரம் பெற்றிருக்கும். சில வரிகளையும் அறவிடலாம். (எனினும் இது குறித்து பாராளுமன்றம் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.) மாகாண எல்லை கடந்தும், தமிழ்க் கிராமங்களை இணைக்க முடியும். மேலும், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் கூட, தமிழ் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் வரும். கடைசியாகக் கூறப்பட்டது, தமிழர் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். ஏனெனில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் தான், தமிழ்ப் பிரதேசத்தில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தன. சிங்கள கடும்போக்காளர்கள், பண்டா-செல்வா ஒப்பந்தமானது, தமிழருக்கு அதிகளவில் விட்டுக் கொடுத்து விட்டதாக, அல்லது பிரிவினைக்கான முதல் படியாக கருதினார்கள். அந்தக் காலத்தில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது, ஜெயவர்த்தனவால் தலைமை தாங்கப் பட்டது. ஜெயவர்த்தனாவும், பண்டாரநாயக்க போன்றே, கிறிஸ்தவராக இருந்து பௌத்தராக மதம் மாறி, சிங்கள தேசியக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தவர். சிங்களப் பேரினவாதக் கருத்துக்கள், வெகுஜன அரசியலில் இலகுவில் எடுபடுவதை உணர்ந்து கொண்டார். கட்சிக்கு ஆதரவு வாக்குகளை திரட்டுவதற்காகவும், பௌத்த பிக்குகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை நடத்தினார்.

பக்தர்கள் யாத்திரை செல்வதைப் போல, ஐக்கிய தேசியக் கட்சி தொண்டர்கள் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு பாத யாத்திரை சென்றனர். போகும் வழியில், சுதந்திரக் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரண்டு கட்சியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. திட்டமிட்ட படி, நான்காம் நாள் கண்டியை சென்றடைந்த ஜெயவர்த்தன, "தீமை பயக்கும் ஒப்பந்தத்தை அழிக்க வேண்டுமென, கடவுளிடம் ஆசி வாங்கிக் கொண்டு" திரும்பினார். ஆனால், கடவுள் அந்தளவு சக்தி வாய்ந்தவராகத் தெரியவில்லை. ஒக்டோபரில் பாத யாத்திரை நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. எதிர்க்கட்சியினரின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிவது இழுக்கு என்று பண்டாரநாயக்க கருதியிருக்கலாம். ஆயினும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அமுல் படுத்துவதற்கு முனையவில்லை. இதனால், தமிழர் தரப்பில் அதிருப்தி உருவானது. 1958 மார்ச் மாதமளவில், நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியது. வாகன இலக்கத் தகடுகளில், ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, சிங்கள "ஸ்ரீ" எழுத்துப் பொறிக்கும் நடைமுறை வந்தது. (சிங்கள ஸ்ரீ எழுத்து (ශ්‍රී ), மலையாள ஸ்ரீ போன்றிருக்கும்.) வட மாகாணத்தில் "ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்" நடந்தது. ஸ்ரீ இலக்கத்தகடு பொருத்திய வாகனங்கள் கல் வீச்சுக்கு இலக்காகின, அல்லது ஸ்ரீ எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன.

"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" தெற்கில் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டது. கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன. தமிழ்ப் பொதுமக்களும், தமிழ்க் கடைகளும் தாக்கப் பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்டத்தை இடை நிறுத்தினார்கள். இருப்பினும், "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டமானது, சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் உள்நோக்கம் கொண்டது!" என இனவாதப் பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். கொழும்பில் பிரதமரின் இல்லம் முன்பு, இனவாதப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியை மறித்து போராட்டம் நடந்ததால், பண்டாரநாயக்கவினால் வீட்டிற்கு போக முடியவில்லை. பிக்குகளுடன் எந்தளவு பரிந்து பேசியும், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி, வானொலி நிலையத்திற்கு சென்ற பண்டாரநாயக்க, "பண்டா-செல்வா ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப் படுவதாக" அறிவித்தார். அப்போதும் திருப்தியடையாத பிக்குகள், "சுதந்திரக் கட்சியை கலைக்க வேண்டும். இந்திய வம்சாவழித் தமிழரை திருப்பி அனுப்ப வேண்டும்." என்று கோரினார்கள். இவை யாவும் நடைமுறைச் சாத்தியமில்லாதவை என்று மறுத்த பண்டாரநாயக்க, அரச முத்திரையில் உள்ள தமிழ் எழுத்துகளை நீக்குவதற்கு மட்டும் சம்மதித்தார்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டதை எதிர்த்து, தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். ஆனால், வேறெந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதே நேரத்தில், ஏப்ரல் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல, இடதுசாரிக் கட்சிகளே வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கின. ஆனால், "வேலை நிறுத்தம் தமிழரின் சதி!" என்று, வலதுசாரி சக்திகள் வதந்தியைப் பரப்பி விட்டன. அரசாங்கத்திலும் சில கடும்போக்காளர்கள் அவ்வாறு தெரிவித்ததால், வதந்தியை உண்மை என்றே சிங்கள மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சுகாதார அமைச்சர் விமலா விஜேவர்த்தன, கல்வி அமைச்சர் தஹாநாயக்க போன்றோர், இவ்வாறு தமிழர் விரோதக் கருத்துகளை பரப்பினார்கள். பிற்காலத்தில், பண்டாரநாயக்க கொலையில் இவர்களின் பங்கிருந்தது கண்டறியப் பட்டது. பண்டாரநாயக்க அரசில் பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரிகளின் செல்வாக்கு உயர்ந்ததால், அதிருப்தியடைந்த வலதுசாரி சக்திகள், தமக்குள் ஒன்றிணைய ஆரம்பித்தன. இந்த சக்திகள், பல தரப்பட்ட பின்னணியை கொண்டவை. நில உச்சவரம்பு சட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலவுடமையாளர்கள் மற்றும் பௌத்த பிக்குகள். தேசியமயமாக்கல் கொள்கையால் நிறுவனங்களை பறிகொடுத்த முதலாளிகள். இவர்கள் எல்லோரும், எதிர்க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தனர்.

அநேகமாக, பேரூந்து வண்டி நிறுவன முதலாளிகளே, தேசியமயமாக்கலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். காலனிய காலத்தில் அறிமுகப் படுத்திய, மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சாதனமான பேரூந்து வண்டிகள் யாவும், தனியார் வசம் இருந்தன. தரகு முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில், பேரூந்து வண்டி உரிமையாளர்கள் பல சலுகைகளை அனுபவித்தனர். அதற்குப் பிரதியுபகாரமாக, தேர்தல் காலத்தில் உழைக்கும் மக்களை இலவசமாக ஏற்றிக் கொண்டு வந்து ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்க வைப்பார்கள். அந்தக் காலத்தில் அது சட்டவிரோதமாக கருதப் படவில்லை. பண்டாரநாயக்க அரசு, பேரூந்து வண்டிகளை தேசியமயமாக்கியதற்கு, ஐ.தே.கட்சியின் தேர்தல் மோசடி ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், உழைக்கும் மக்களுக்கு அதனால் பலன் கிடைத்தது. அரச மானியம் கொடுத்து, சீட்டுகளின் விலை குறைக்கப் பட்டது. மாணவர்களுக்கு சலுகை விலையில், பருவகால சீட்டுகள் விற்பனை செய்யப் பட்டன.

தனியார் பஸ் வண்டிகள் யாவும், "இலங்கை போக்குவரத்து சபை" (இபோச) என்ற அரச நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப் பட்டன. இபோச யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய புதிய பஸ் வண்டிகளில், சிங்கள ஸ்ரீ எழுத்துப் பொறிக்கப் பட்டிருந்தது. அப்போது தான் "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" நடந்தது. இளைஞர்களின் கல்வீச்சுக்கு ஆளான பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி பொலிஸ் நிலையம் ஒன்றினுள் தஞ்சம் புகுந்தார். அப்போது பொலிஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால், போலீசார் சுட்டதில் சிலர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் யாழ் குடாநாட்டில் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. இந்தப் போராட்டம் ஓய்ந்து ஒரு மாதம் முடிவதற்குள், தெற்கில் இடதுசாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் நடந்தது.

தேசியமயமாக்கல் கொள்கையால் விழிப்புணர்வு பெற்ற இபோச ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். அவர்களின் கோரிக்கைகளான இலவச மருத்துவ காப்புறுதி, ஓய்விடம், ஊதிய உயர்வு போன்றன அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் தோன்றிய குழப்ப நிலையை, முன்னை நாள் முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். தமது பிழைப்பைக் கெடுத்த அரசை கவிழ்க்க இதுவே தக்க தருணம் எனக் கண்டுகொண்டனர். 1958 இனக்கலவரத்தின் பின்னணியில், முன்னாள் பஸ் வண்டி முதலாளிகளின் கை மறைந்திருந்ததாக சந்தேகிக்கப் படுகின்றது. ஆனால், அதனை நிரூபிக்கும் வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை. இனவெறியை வளர்த்து, சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு, வலதுசாரி முதலாளிய சக்திகள் திரைமறைவில் முயன்று வருகின்றன. அந்த சக்திகளுக்கு இடையிலான இரகசிய தொடர்பு, இன்று வரை துலங்காத மர்மமாகவே நீடிக்கின்றது.
பாதாள உலகமும் பகிரங்க வெறியாட்டமும்
essay பிரிட்டன் அயர்லாந்தை ஆக்கிரமித்த காலப் பகுதியில் பாரம்பரியமாகத் தொன்மை வாய்ந்த கலாசாரத்துடன் வாழ்ந்த அந்த மக்கள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி கொள்ளப்பட்டபோதும் அவர்களின் போராட்டம் தொடர்ந்து முனைப்படைந்து வந்தது. அந்தப் போராட்டத்தை அடக்க, கொடிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளை அங்கு கொண்டு சென்று சகல வசதிகளும் வழங்கி ஆயுதபாணிகளாக்கிக் குடியேற்றியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் பெண்கள், முதியோர், குழந்தை கள் எனப் பல ஆயிரக்கணக்கான அயர் லாந்து மக்களைக் கொன்று குவித்தனர். எங்கும் காடையரின் காட்டாட்சியே மேலோங்கி நின்றது.
 பிரிட்டன் அயர்லாந்தை ஆக்கிரமித்த காலப் பகுதியில் பாரம்பரியமாகத் தொன்மை வாய்ந்த கலாசாரத்துடன் வாழ்ந்த அந்த மக்கள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி கொள்ளப்பட்டபோதும் அவர்களின் போராட்டம் தொடர்ந்து முனைப்படைந்து வந்தது. அந்தப் போராட்டத்தை அடக்க,  கொடிய குற்றங்களுக்காக சிறையில்  அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளை அங்கு கொண்டு சென்று சகல வசதிகளும் வழங்கி ஆயுதபாணிகளாக்கிக் குடியேற்றியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் பெண்கள், முதியோர், குழந்தை கள் எனப் பல ஆயிரக்கணக்கான அயர் லாந்து மக்களைக் கொன்று குவித்தனர். எங்கும் காடையரின் காட்டாட்சியே மேலோங்கி நின்றது.
 
ஆனால் ஐரிஷ் மக்களின் போராட்டத்தை அடக்கிவிட முடியவில்லை. சில காலம் பின்னடைவுகளுக்கு முகம் கொடுத்த போதிலும் ஐரிஷ் மக்கள் ஐ.ஆர். ஏ. என்ற விடுதலை அமைப்பின் தலைமையில் கிளர்ந்தெழுந்தனர். "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்லு'' என்ற கோஷத்துடன் களத்தில் இறங்கினர். 350 வருடங்கள் தொடர்ந்து போராடி எவ்வளவோ தியாகங்கள் மத்தியில் அயர்லாந்து விடுதலை பெற்றது.
 
பச்சைப் புலிகளின் அட்டகாசங்கள்
அடக்குமுறையாளர்கள் சமூகக் குற்றவாளிகளைத் தங்கள் அராஜக நடவடிக்கைக்குப் பாவிப்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா காலத்தில் ஜே.வி.பியின் போராட்டங்களை அடக்க பச்சைப் புலிகள் என்ற ஒரு பயங்கர அமைப்பு பயன்படுத்தப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. அவர்கள் வீதி வீதியாகச் சிங்கள இளைஞர்களை வெட்டி யும் சுட்டுக் கொன்றதையும் தலைகளை வெட்டி சந்திகளில் வைத்தமையையும் ஆறுகளில் பிரேதங்களை மிதக்கவிட்டமையையும் நாம் மறந்துவிட முடியாது. 
 
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த போது களனி ஆற்றில் தமிழர்களின் சடலங்கள் மிதக்க விடப்பட்டன. இந்த நிலைமை 1995 இற்குப் பின் இலங்கை அரசியலில் தீவிரமடைந்தது. முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்களுக்கென பாதாள உலகக் கோஷ்டிகளை வைத்திருந்து குட்டி அரசுகள் நடத்துமளவுக்கு நிலை மைகள் மோசமடைந்தன. இந்தக் கோஷ்டி களை வழி நடத்த ஏற்கனவே கொள்ளை, கூலிக்குக் கொலை, போதைவஸ்து, வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இராணுவத்திலிருந்து ஓடி வந்தவர் களும்தாராளமாகக் களமிறக்கப்பட்ட னர். இவர்கள் ஒரு துணை இராணுவக் குழுவாகவே இயங்கினர்.அரசியல் கொலைகள், பழிவாங்கல்கள் ஆள்கடத்தல், கப்பம், அரசியல் பேரங்கள், மிரட்டல்கள் எனப் பலவிதமான தேவைகளுக்கும் இவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
 
தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்களும் வடக்கு கிழக்கில் அரச சார்பு முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக் களும் இராணுவத்தினர், பொலிஸாரின் துணையுடன் செயற்பட்டு வந்தனர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பேரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து எமது மக்களை வீதி வீதியாகவும் வீட்டு முற்றங்களிலும் கொன்று போட்டவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.
 
இப்படியான ஒரு புறச்சூழலில்தான் கொலன்னாவ தொகுதியின் முல்லேரியா பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் கண் காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதியின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குமான பணிப்பாளருக்குமிடையே இடம்பெற்ற ஆயுத மோதலில் நால்வர் கொல்லப் பட்டனர். பத்துக்கு மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.
 
ஒரே கட்சியில் ஒரே சின்னத்தில் போட்டியிட்ட இருவருக்கிடையேதான் உயிர்ப்பலி கொண்ட இந்த மோதல் இடம்பெற்றது  என்பது இலங்கையில் அரசு பற்றியும் அதன் ஆட்சியாளர்கள் பற்றியும் கேள்வி எழுப்புகிறது. இப் படியான மோதல்களின் அடிப்படை யைப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு தேவையும் எழுகிறது.
 
உச்சம் பெற்றுள்ள வன்முறைகள்
இந்த மோதல் தொடர்பாக மூத்த அரசியல்வாதியும் சிரேஷ்ட அமைச்ச ருமாகிய டியூ.குணசேகர கருத்து வெளி யிட்டபோது ஓர் உண்மையை வெளிப் படையாகவே தெரிவித்திருந்தார். அதாவது அவர் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புடையவர்கள் அரசியலுக்கு வந்தால் இவ்வாறான கொடூரங்கள் அரங்கேறும் எனத் தெரிவித்திருந்தார்.
 
அவரின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையிலேயே மோதலின்போது இடம் பெற்ற சம்பவங்களும் அதன் பின்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.இந்த மோதல் இடம் பெற்ற போதும் அதன் பின்பு சில மணித்தியாலங்களும் அந்தப் பிரதேசம் ஒரு போர்க்களம் போல் காணப்பட்டதாகவும் மக்கள் நாலாபுற மும் சிதறி ஓடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப் பினர் பாரத லக்ஷ்மன் அவரது இரு மெய்ப் பாதுகாவலர்கள் ஆகியோர் ஸ்தலத்திலேயே கொல்லப்படுமளவுக்கும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடையுமளவுக்கும் அங்கு வன்முறை உச்சம் பெற்றிருக்கிறது. அது மட்டு மன்றி முல்லேரியா பகுதி முழுவதுமே பெரும் கொந்தளிப்பான நிலைமையும் காணப்பட்டது.
 
அன்று இரவு கொலன்னாவ பகுதியில் பொலிஸ் ஊரடங்கை அமுல்படுத்த வேண்டிய அளவுக்கும் இராணுவம் களமிறக்க வேண்டிய அளவுக்கும் நிலைமை மோசமாக இருந்துள்ளது. அது மட்டுமன்றி காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயவர்த்தனபுர மருத்துவமனைக்கு பலத்த பொலிஸ் இராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருந்தது. இதிலிருந்து நாம் நிலைமையின் மோசமான தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
 
ஆயுதக் கோஷ்டியின் அப்பட்ட வன்முறைகள்
 
பொலிஸாரால் விடுக்கப்பட்ட, உடனடியான அமுலாகும் வகையிலான சில உத்தரவுகள் அங்கு நடந்த விடயங்களையும் அவற்றின் பின்னணியையும் ஊகிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன.அதாவது முக்கிய பிரமுகர்கள் மெய்ப் பாதுகாவலர்கள் இனி பொலிஸ் சீருடை அணிந்து கடமையில் ஈடுபடவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் பிரமுகர்களின் வாகனங்களை ஆயுதம் தாங்கிய தனி நபர்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
இதிலிருந்து இதுவரை அரசியல் பிரமுகர்களின் வாகனங்கள், அவற்றுக்கு வழங்கப்படும் சலுகைகள் ஆயுதக் கோஷ்டிகளின் வன்முறை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப் பட்டு வந்தன என்பதும் மெய்ப் பாதுகாவலர்கள் போன்று ஆயுதம் தாங்கிய தனிநபர்கள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து திரிந்துள்ளனர் என்பதும் தெளிவாகவே தெரிய வருகிறது.
இன்னுமொரு வார்த்தையில் சொல்லப் போனால் பாதாள உலகைச் சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகளின் அடியாள்களாகவும் செல்லப் பிள்ளைகளாகவும் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தமையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
 
இவை ஏற்கனவே மக்களால் அறியப்படாதவையல்ல. ஆனால் பொலிஸ் தரப்பின் உத்தரவுகள் மூலம் இவை உறுதி செய்யப்பட்டுள்ளமை தான் இங்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.ஏற்கனவே இந்தப் பாதாள உலகக் குழுக்கள் அரசுக்கு விரோதமான அரசியல் வாதிகள், ஊடகவியலாளர் களைக் கொலை செய்வது கடத்திக் காணாமற் போகச் செய்வது போன்ற விடயங்களில் தாராளமாகவே பயன்படுத்தப்பட்டு வந்தன. சட்டம் இவர்களை நெருங்குவதில்லை. அப்படி இவர்கள் தவிர்க்க முடியாமல் கைது செய்யப்பட்டாலும் உடனடியாகவே பிணையில் செல்ல ஏற்பாடுகள் செய் யப்பட்டுவிடும்.

பொலிஸார் முன்னிலையில் இடம்பெற்ற தாக்குதல்கள்
 
விலைவாசி உயர்வுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய போராட் டம் தாக்கப்பட்டமை, ஜே.வி.பி.மேற் கொண்ட மாணவர் போராட்டங்கள் மீதான தாக்குதல்கள், கட்டுநாயக்காவில் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர் களின் ஆர்ப்பாட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சிரச ஊடக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் என் பனவற்றை இங்கே குறிப்பிடலாம். இந்தச் சம்பவங்களில் பொலிஸார் முன் னிலையிலேயே காடையர்கள் தாக்கு தல்களை மேற்கொண்டனர் அல்லது பொலி ஸாருடன் காடையர்களும் இணைந்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.
 
இதேபோன்று கொழும்பு புறநகர் பகுதியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அனுராத புரத்தில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முஸ்லிம் தர்க்கா இடிக்கப்பட்டமை, அமைச்சர் மேர்வின் சில்வா நடத்தும் அட்டகாசங்கள் இவை பற்றியெல்லாம் எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய மர்மமனிதர்கள் பிரச்சினை யிலும்கூட எந்த  ஒரு மர்மனிதனும் கைது செய்யப்படவுமில்லை; தண்டிக் கப்படவுமில்லை. ஆனால் யாழ்ப்பாணத் தில் மர்ம மனிதர்களுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய பொது மக்கள் சுட் டுக் கொல்லப்பட்டனர்; அடித்து நொருக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு நீதி மன்றில் நிறுத்தப்பட்டனர்.
 
ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சியினருக்கு எதிராகவோ, ஊடகவியலாளர்களுக்கு எதிராகவோ பொதுமக்களுக்கு எதிராகவோ நடத்தப்படும் காடைத்தனங்களுக்கு எதிராக முறையான நடவடிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்படவில்லை. அனைத்தும் அரசியல் ரீதியாகவோ அல்லது இன, மதக் கண்ணோட்டத்திலோ அணுகப் பட்டன.
இன்னொரு விதத்தில் சொல்வதானால் சில குறிப்பிட்ட விடயங்களில் காடைத்தனங்களுக்கு மறைமுகமான அனுமதி வழங்கப்பட்டது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படும் வண்ணம் பல சம்பவங்கள் இடம்பெற்றன.
 
அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எழுச்சிபெறும் தொழிலாளர் களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிராகப் பாவிக்கப்பட்ட இந்தப் பாதாள உலகக் கும்பல் இன்று ஆளுங்கட்சி யினரே ஒருவரை ஒருவர் கொன்று தள்ளுமளவுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதம் அரசுக்கே தலையிடியாக மாறியதுடன் அரசு சார்ந்த அரசியல்வாதிகளையும் நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டது என்பதுதான் யதார்த்தம்.             

Thursday 20 October 2011

"கடாபி பற்றிய ஒரு சிறப்பு பார்வை"

படங்களுடன்
இளம் வயதிலேயே பல வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் தனக்கு இணையான தலைவர் எவரும் இருக்க முடியாது. எவ்வாறான வல்லரசுகள் வந்தாலும் அதற்கு இணையாக எனது நாட்டை வழி நடத்திச் செல்வேன் என்ற மன உறுதியுடன் நான்கு தசாப்த காலமாக லிபியாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சர்வாதிகாரி முவம்மர் கடாபி மட்டுமா? அவரது இராச்சியமும் இன்றுடன் வீழ்ந்தது. பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்வென்று தெரியாமல் பல நாடுகளை கதிகலங்க வைக்கும் வகையில் தனது நாட்டு மக்களை தன் பிடியில் வைத்து ஆட்சி நடத்தி வந்த கடாபியின் வரலாற்றை சற்று பின்நோக்குவோம்…

1942ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி பிறந்த முஅம்மர் கடாபி சிறு வயது முதல் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வந்துள்ளார். இளம் வயதிலேயே லிபிய இராணுவத்தில் வீரராக இருந்த இவர் 1965ஆம் ஆண்டு பெங்காசி இராணுவ பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். 1966ஆம் ஆண்டு பிரிட்டன் ரோயல் மிலிட்டரி பயிற்சிக்குச் சென்றார்.

மீண்டும் படைக்குத் திரும்பிய அவர், தனக்கென ஆதரவாளர்களைத் திரட்டியதுடன் தனி இராச்சியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற மன உறுதியை வளர்த்துக்கொண்டார். இச் சந்தர்ப்பத்தின்போதே லிபிய மன்னர் இத்ரீஸ் சிகிச்சை ஒன்றுக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சி மூலம் தனது 29 ஆவது வயதிலேயே ஆட்சியைக் கைப்பற்றினார்.

1969ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றி லிபிய அரபுக் குடியரசு என்று அறிவித்தார். 41 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்து ஆட்சி செய்துள்ளார். கடாபி முப்படைத் தளபதியாகவும், ஆளும் கவுன்சில் தலைவராகவும் ஆனார். 1970 ஆண்டு முதல் 1972 பிரதமராகவும், இராணுவ அமைச்சராகவும் இருந்தார். மன்னராட்சி முறையை ஒழிப்பதாகக் கூறியவர், தொடர்ந்து அதிபராக தானே நீடித்தார். ஏழைகளுக்கு அடிப்படை வாழ்க்கை வசதிகளை அளிப்பதாகக் கூறிய அவரது குடும்பம் கடந்த 41 ஆண்டுகளில் ஏராளமான சொத்துக்களை சேர்த்ததாகக்கூட குற்றச்சாட்டு எழுந்தது.
தன் உயிர் உள்ள வரை தனது உயிர் நாடியாக லிபியா இருக்க வேண்டும் என்பதே கடாபியின் கனவாக இருந்தது. ஆனால், இது முழுமையான அளவு நிறைவு பெறாமல் முற்றுப்புள்ளியை நோக்கிச் செல்லும் என்று கடாபி கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார். ஆம், முஅம்மர் கடாபி…ஆட்சியை தன் கையில் எடுத்த ஆரம்பத்தில் அவருக்கு அதிகளவு ஆதரவு இருந்தது. ஆனால், நாள் செல்லச்செல்ல கடாபிக்கான மக்களின் ஆதரவு வலுவிழந்தது.

ஆபிரிக்காவின் வட எல்லையில் மத்திய தரைக்கடல் பகுதிக்கு அண்மையில் சூடானுக்கும் எகிப்துக்கும் இடையில் அமைந்திருப்பது தான் லிபியா. இவ்வாறான புரட்சி வெடிக்கும் நாடாகவே லிபியாவும் இருந்து வந்தது. இந்நாட்டின் அதிபதியாக, தலைவனாக மக்களை தன் வசம் வைத்திருந்தவர் தான் முஅம்மர் கடாபி… அரபு தேசியம் என்றும், இஸ்லாமிய சோசலிசம் என்றும், மக்களின் நேரடிக் குடியரசு என்றும், பலவிதமாக தன் அரசை சித்திரித்துக் கொண்டிருக்கிறார். நவீன குடியரசு என்று சொல்லிக்கொண்டே 41 ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்துகொண்டிருந்தவர் தான் கடாபி. இவருக்கு இரண்டு மனைவிகளும் எட்டுப் பிள்ளைகளும் (7 ஆண் பிள்ளைகள், 1 பெண்) உள்ளனர்.

மூத்த மகன் முஹம்மது அல் கடாபி – இவர் லிபியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தவராவார். இரண்டாவது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி – இவர் அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய தர்ம ஸ்தாபனத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது மகன் சாதி கடாபி – தேசிய உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். நான்காவது மகன் முடாசிம் கடாபி – லிபிய இராணுவத்தில் உயர்ந்த பதவியை வகிக்கிறார்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியான – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி இவருடையதாகவே இருந்து வந்துள்ளது. ஐந்தாவது மகன் ஹன்னிபால் கடாபி – நாட்டின் எண்ணெய் வளம் முழுவதையும் மேற்கொண்டிருக்கும் நிறுவனத்தை நிர்வகித்து வந்துள்ளார். ஆறாவது மகனான சைப் அலி கடாபியும், ஏழாவது மகனான காமிஸ் கடாபியும் நாட்டின் பொலிஸ் நிர்வாத்தைக் கவனிக்கிறார்கள். அவரது ஒரே மகளான – ஆயிஸா அல் கடாபி ஒரு சட்டத்தரணியாவார். நாட்டின் நீதி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிப்பவராவார்.

கடாபி புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதை எழுதியது தான் என்றும் சொல்கிறார் ! தனக்கென சொந்தப் பாதுகாப்பு படையைக் கொண்டு சர்வ வல்லமை மிக்கவராகவும் விளங்கிய கடாபி 40 உறுப்பினர்களைக் கொண்ட முற்றிலும் திருமணமாகாத இளம்பெண்களைக் கொண்ட படையொன்றை அமைத்து வைத்திருந்தார். லிபியாவின் எண்ணெய் வளம்தான் கடாபியின் பலமும், பலவீனமுமாக இருந்து வந்தது.

கடாபியின் அராஜக ஆட்சியில் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் தலைமையில் புரட்சிப் படை அமைந்தது. கடந்த பெப்ரவரி மாதம் கடாபிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது. அதனை ஒடுக்குவதற்கு இராணுவத்தை ஏவினார் கடாபி. இரு தரப்புக்கும் பயங்கர மோதல் நீடித்தது. புரட்சிப் படைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலையிட்டு கடாபியை பதவி விலக வலியுறுத்தினர். மறுத்த அவர், கடைசி லிபியா இருக்கும் வரை அந்நியப் படைகளையும், எதிரிகளையும் எதிர்த்துப் போராடுவேன் என்றார்.

இதையடுத்து, ஐ.நா. அனுமதி பெற்று புரட்சிப் படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் கடாபி ஆதரவு இராணுவம் மீது தாக்குதல் நடத்தின. இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக நீடித்த சண்டையில் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றினர். கடும் தாக்குதலுக்கு மத்தியில் மேற்படி நகரம் கைப்பற்றப்பட்டதுடன் கடாபி தலைமறைவானார். இதையடுத்து, கடாபியின் மாளிகையை புரட்சிப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொடி நாட்டினர். இந்த வெற்றியை லிபியா முழுவதும் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லிபியா சர்வாதிகாரியின் பிடியில் இருந்து விடுபட்டு விட்டது” என்று அந்த அறிக்கையில் அறிவித்தார். லிபியாவின் எதிர்காலம் இனி அந்த நாட்டின் மக்கள் கைகளில் இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின்னரே தொடர் போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று சிர்தே நகரை அந்நாட்டு இடைக்கால அரச படையினர் கைப்பற்றியதையடுத்து கடாபி கைது செய்யப்பட்டு, காயம் காரணமாக அவர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படடுள்ளது.

Thursday 13 October 2011

தலையிடா கொள்கையும் தார்மீகக் கடமையும்
essay ஒரு நாடோ, இனமோ அல்லது ஒரு வர்க்கமோ இன்னொரு நாட்டின் மீதோ இனத்தின் மீதோ அல்லது வரக்கத்தின் மீதோ அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து உரிமைப் பறிப்புக்களை மேற்கொள்ளும் போது தவிர்க்க முடியாதபடி முரண்பாடுகள் உருவாகின்றன. இந்த முரண்பாடுகளின் வளர்ச்சிகள் மோதல் களாக வடிவெடுக்கின்றன. இந்த மோதல்கள் நிலவும் அடக்குமுறையின் பரிணாமத்துக்கு ஏற்ப அரசியல் ரீதியானதாகவோ ஆயுத வடிவிலான தாகவோ அமைகின்றன. பெரும் அழிவு களை விதைக்கும் போர்கள் கூட இவ்வாறுதான் கருக்கட்டுகின்றன.   ஒரு நாடோ, இனமோ அல்லது ஒரு வர்க்கமோ இன்னொரு நாட்டின் மீதோ இனத்தின் மீதோ அல்லது வரக்கத்தின் மீதோ அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து உரிமைப் பறிப்புக்களை மேற் கொள்ளும் போது தவிர்க்க முடியாதபடி முரண்பாடுகள் உருவாகின்றன. இந்த முரண்பாடுகளின் வளர்ச்சிகள் மோதல் களாக வடிவெடுக்கின்றன. இந்த மோதல்கள் நிலவும் அடக்குமுறையின் பரிணாமத்துக்கு ஏற்ப அரசியல் ரீதி யானதாகவோ ஆயுத வடிவிலான தாகவோ அமைகின்றன. பெரும் அழிவு களை விதைக்கும் போர்கள் கூட இவ் வாறுதான் கருக்கட்டுகின்றன.
 
ஓர் அடக்குமுறை நிலவும் சூழ் நிலையில் அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே மோதல்கள் தொடரும் ஒரு சூழ்நிலையில் எவராவது ஒருவர் இந்தப் பிரச்சினை மீது தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிக்கப் போவதாகக் கூறுவரா னால் நிலவுகின்ற அடக்குமுறைக்கு ஒரு விதமான ஆதரவு வழங்குகிறார் என்பதுதான் அர்த்தமாகிறது. அடக்கு பவர்களையும் அடக்கப்படுபவர்களை யும் ஒரே பார்வையில் பார்ப்பது அடக்கு முறை அடக்கப்படுபவரை விரும்பாத ஒரு போக்கிலிருந்து அல்லது அடக்கு முறை நிலவுவதைப் பொருட்படுத்தாத ஒரு போக்கிலிருந்தே உருவாகிறது. இன்னும் சொல்லப் போனால் இப்படியான சந்தர்ப்பங்களில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றப் போவதாகக் கூறுவது அடிப்படையில் அடக்குமுறை யாளர்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு போக்காகும்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்த இலங் கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வைத்து இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்தப் பேச்சின் போது இலங்கை ஜனாதிபதி இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் மேற்கொண்டு வரும் அழுத்தங்கள் பற்றியும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தியப் பிரதமருக்கு விரிவாக எடுத்து விளக்கினார். இவற்றை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்ட மன்மோகன் சிங் இனிவரும் நாள்களில் இலங்கை உள் விவகாரங்களில் இந்தியா தலையிடப் போவதில்லை எனவும் இலங்கையின் பிரச்சினைகளை இலங்கை அரசே தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் திட்ட வட்டமாகத் தெரிவித்துவிட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
 
ஏற்கனவே ஹிந்துப் பத்திரிகையின் ஆசிரியரும், இந்திய புலனாய்வுப் பிரிவான றோவின் முக்கியஸ்தர் என்று கருத்தப்படுபவருமான  ராம் கொழும்பில் வைத்து இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்க்கும் வலு இலங்கைக்கு உண்டு எனத் தெரிவித் திருந்தார்.இரு கருத்துக்களும் வெவ்வேறு வார்த்தைகளால் வெவ்வேறு விதத்தில் வடிவமைக்கப்பட்டாலும் கூட இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு முக்கிய செய்தியை இலங்கை அரசுக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும்  வெளிப்படுத்தியுள்ளனர்.
 
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இனி இந்திய அரசு வெளிப்படையாகத் தலையிடப் போவ தில்லை என்பதுதான் அது. இதன் மூலம் இலங்கை அரசுக்கு "நீங்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் எந்த ஓர் அடக்குமுறைக்கும் துணைவரவும் மாட்டோம். அதேவேளையில் தடுக்கவும் மாட்டோம் என்ற செய்தியும் தமிழக  மக்களுக்கு "இலங்கை விவகாரம் தொடர்பாக எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்" என்ற செய்தியும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசும் நீங்களும் பட்டதுபாடு என்ற செய்தியும் சொல்லப்பட்டுவிட்டன.
 
மேலோட்டமாக கலாநிதி மன் மோகன் சிங்கின்  வார்த்தைகள் இலங்கை போர்க்குற்ற அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள வேளையில் அதைக் கை விட்டுவிட்டதாகத் தோன்றினாலும் அடிப்படையானவை மேற்குறிப்பிட்ட மூன்று செய்திகளுமே. எனவே இந்தியப் பிரதமரின் அறிவிப்பு தமிழ் மக்களுக்குச் சாதகமானதா அல்லது பாதகமானதா என்பதை அண்மைக்கால அரசியல் வரலாற்றை விளங்கிக்கொண்ட எவராலும் வெகு தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும்.
 
இலங்கையின் இனப்பிரச்சினை ஆரம்பித்த காலம் தொட்டு 1990 இல் இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறும் வரை தமிழ் மக்களுக்  குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு இருந்தே வந்தது. ராஜீவ் காந்தியின் கொலையை அடுத்து இந்தியாவில் விடுதலைப் புலிகள் பயங் கரவார இயக்கமாகத் தடை செய்யப் பட்டது. அத்துடன் இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களில் இந்தியா நேரடியாகத் தலையிடுவதை நிறுத்திக் கொண்டது. 
 
2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்ட போது இரு தரப்பினராலும் இந்தியாவின் ஒத்துழைப்பு கோரப்பட்ட போதும் இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்தியாவின் ஏதோ ஒரு நகரத்தில் பேச்சுக்களை நடத்த அனுமதி கோரியபோதும் இந் தியா அதை மறுத்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு சுற்றுப் பேச்சுக்கள் முடிந்த பின்பும் அனுசரணை யாளர் எரிக் சொல் ஹெய்ம் அவற்றின் பெறுபேறுகள் தொடர் பாக புதுடில்லி சென்று அறிவித்தே வந்தார்.
 
இந்தியா இந்தப் பேச்சுக்களில் நேரடியாகக் கலந்து கொள்ளாத போதும் இதைப் பயன்படுத்தி எதிர்காலத்துக் கான ஒரு வலையமைப்பைப் பின்னிக் கொண்டது. ஒவ்வொரு முறையும் நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் பேச்சுகள் இடம்பெற்ற போது ஊடக நிருபர்களாக ராஜதந்திர சேவையில் உள்ளவர்களாகப் பேச்சுக்களில் கலந்து கொண்ட இரு தரப்பினரிடமும் நெருக்க மான உறவுகளைக் கொண்டிருந்தனர். இதன்மூலம் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலி களின் முக்கிய ஆதரவாளர் கள் இனம் காணப்பட்டனர். விடுதலைப் புலிகளின் பலங்கள், பலவீனங்கள் கணக்கிடப்பட்டு அவர் களில் சிலரை விலைக்கு வாங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அன்ரன் பாலசிங்கத்துக்கும் வேறு சிலருக்கும் முரண்பாடு ஏற்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
 
 
அதாவது தலையிடாக் கொள்கைகளின் பேரில் இந்தியப் புலனாய்வுப் பிரிவுப் பேச்சுக்களைத் தோல்வியடைய வைக்கவும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுக்குள் முரண்பாடு களை உருவாக்கவும் முழு வீச்சில் செயற்பட்டது.இப்போது மீண்டும் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இன்னுமொரு முறை இந்தியா தனது தலையிடாக் கொள்கையைப் பிரகடனம் செய்துள்ளது.
 
அதாவது பேச்சுகள் இடம்பெறும் காலங்களிலேயே இந்தத் தலையிடாக் கொள்கை முனைப்படைகிறது என் பதை நாம் அவதானிக்க முடியும். 2002 ஆம் ஆண்டு பேச்சுகள் இடம் பெறும் போது விடுதலைப் புலிகள் உயர்ந்த பட்ச பலத்துடன் இருந்தனர். விடு தலைப்பிரதேசங்களை அமைத்துச் சொந்த நிர்வாகக் கட்டமைப்புக்களை நிலை நிறுத்துமளவுக்கு மட்டுமன்றி தரைப்படை, கடற்படை, விமானப்படை, சிறந்த புலனாய்வுப் படை என்பன கொண்ட ஓர் அரசுக்குரிய சகல அம்சங்களையும் கொண்டு அவர்கள் பலத்துடன் விளங்கினர். இந்த நிலைமை அவர்களின் பேரம் பேசும் வலுவை ஸ்திரப்படுத்தியிருந்தது. எனவே அன்று அவர்கள் இலங்கை அரசுடன் ஒரு சமாந்தரமான அந்தஸ்திலிருந்து பேச்சுக்களை நடத்தினர்.
 
எனினும் அந்தப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்து மீண்டும் போர் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போரில் சகல வல்லரசு நாடுகளையும் தன் பக்கம் திரட்டுவதிலும் விடுதலைப் புலிகளைத் தனி மைப்படுத்துவதிலும் இலங்கை அரசு வெற்றிபெற்றது. இந்தப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக் கப்பட்டு அந்தக் கட்டமைப்பு முற்றாகவே சிதைக்கப்பட்டது. தமிழ் மக்களின் பலமாக இருந்த விடுதலைப் புலிகள் இலங்கையின் போர்க் களத்திலிருந்து மட்டுமன்றி அரசியல் களத்திலிருந்தும் முற்றாகவே துடைத்தழிக்கப்பட்டனர்.
 
ஆயுத உதவி, படைப் பயிற்சி, தொழில்நுட்ப உதவி, புலனாய்வுத்தகவல்கள் எனப் பல்வேறு விதமான காத்திரமான பங்கை வழங்கி இலங்கை அரசு இந்தப் போரில் வெற்றி பெற இந்தியா முக்கிய பங்காளியாக விளங் கியது. அதிலும் போரின் இறுதி நாள் களில் ஒரு போர் நிறுத்தம் ஏற்படுத்த மேற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சியை வலுவிழக்க வைத்ததும் இந்தியா தான்.
 
அதாவது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் பேரம் பேசும் உரிமையை வலுப்படுத்தி வைத்திருந்த விடுதலைப் புலிகளை அழிப்பதில் இந்தியா முன்னின்று செயற்பட்டுள்ளது என்பதை எவருமே மறுத்துவிடமுடியாது. எனவே புலிகள் வழங்கிய அதே பலத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு. ஆனால் இந்தியாவின் செயற்பாடுகள் மாறாகவே உள்ளன.இன்று தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய பலம் என்பது தமிழ் மக்களின் ஐக்கியம், உரிமைக் கோரிக்கைகளின் தார்மீக நியாயம் என்பன மட்டுமே. இவற்றை வைத்துக் கொண்டே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேசைகளில் தன் நடவடிக்கையைத் தொடர்கிறது.தமிழ் மக்களின் ஐக்கியம் என்பதில் இரண்டாவது கேள்விக்கே இடமில்லை. தமிழ் மக்கள் எவ்வித சலனமுமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின் அணி திரண்டுள்ளனர். 
 
அதேபோன்று புலம் பெயர் மக்களின் போராட்டங்களும் ஏனைய நடவடிக்கைகளும் மேற்குலக நாடு களைத் தமிழ் மக்களின் நியாயங்களை ஏற்கவைத்துள்ளன. மேலும் தமிழக மக்கள் வழங்கி வரும் பேராதரவும் நடத்தும் போராட்டங்களும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் பல சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளன.
 
இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச அக்கறைகளும் தமிழ் நாட்டில் ஏற்பட்டு வரும் எழுச்சிகரமான சூழலும் இந்தியா தொடர்ந்தும் இலங்கை விட யத்தில் இலங்கை அரசுக்குச் சாதகமாகப் பகிரங்கமாகச் செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது. அப்படித் தலையிடுவதானால் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவே செயற்பட வேண்டி வரும்.இப்படியான நிலையில்தான் இந்தியா இனி இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை எனத் திடீரெனத் தெரிவித்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இது இலங்கையின் நடவடிக்கைகளில் இந்தியா அதிருப்தி கொண்டு எடுத்த ஒரு முடிவு போலவே தென்படும்.ஆனால் உண்மையில் தமிழ் மக்களுக்குத் தான் ஆற்ற வேண்டிய தார்மீகக் கடமையிலிருந்து விலகிக் கொள்ளும் அப்பட்டமான ஒரு தந்திரோபாய நடவடிக்கையே இதுவாகும் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை.